அவன் தான் அனுப்பினான்.
அந்த படம் என்னிடத்தில் வந்தது. ஏன் அனுப்பினான்? எதற்காக வந்தது? தெரியவில்லை…! ஏதோ
ஒரு வகையில் அந்த படம் என்னை சலனப்படுத்திக்கொண்டிருந்தது. அது அனுப்பியன் மேல் இருந்த
நன்மதிப்பா…அல்லது அவன் கருத்துகளில் ஏற்பட்ட ஈர்ப்பா? விடை தேடும் முயற்சியை தள்ளிவைத்தேன்.
இணையத்தின் வாசலில் உலகம் ஒரு ஒற்றுப்புள்ளியாக காட்சித்தர வியந்துக்கொண்டேன். அவன்
யாரோ எவரோ? அவனை குறித்து பல நேரங்களில் இதழில் குமிழும் புன்னகை இணையத்தின் தாக்கத்தை
பறைச்சாற்றி சென்றது என்னுள்ளாக.
படிகளால் நிரப்பப்பட்டு
ஒரு ஆழ்துளையின் படம். படத்தை பார்த்தமாத்திரத்தில் படத்திற்குள் குதித்து, கிடுகிடுவென்று
படிகளில் இறங்கினேன். சுற்றிலும் நிமிர்ந்திருந்த தூண்கள் பிரமிப்புட்டியது. இந்திய
கட்டிட கலையின் ஆணிவேர் என்று எண்ணிக்கொண்டேன். ஆழ்துளையினுள் எட்டிப்பார்த்தேன், லேசான
கிறக்கம், அம்மாடியோ…! கன்னங்களில் இரு கை பதித்து வியந்தேன். எதன் வழியாக படி அருகே
வந்தேன் தெரியவில்லை, மீண்டும் எப்படி வெளியேறுவது, நான் சுதாரித்துக்கொள்ள நாழிகை
தந்து அவன் தாங்கிக்கொண்டிருந்தான். அவன் அவன்?
யார் என்று தெரியவில்லை. திரும்பி பார்க்கும் அவகாசம் இல்லாமல் என்னை பற்றி நிகழ்காலத்தில்
வீசி எறிந்தான். மனம் திடும் என்று நிகழ் உலகத்தில் நின்றது.
அந்த படத்தை உற்றுப்
பார்த்தேன், அந்த உற்றுதல் கால வெள்ளத்தில் பின்னோக்கி பயணிக்கத்துவங்கியது. இப்போது
இருப்பது போல் அந்த காலத்திலும் வரைப்பட கலைஞர்கள் இருந்திருப்பார்களோ பென்சிலும் அளவு
கோலுமாக திரிந்துக்கொண்டு 1 சென்டிமீட்டர் – 1000 கி.மீட்டர் என்று அலகு எழுதிக்கொண்டு.
இதைக்கட்டி முடிக்க எத்தனை நாட்கள் ஆகியிருக்கும், எத்தனை மேஸ்திரிகள், எத்தனை கொத்தனார்கள்,
ஆம்பளை ஆள் எத்தனை, பொம்பளையாள் எத்தனை, விழிகளை கொள்ளை கொள்ளும் காதலின் சாடைப்பேச்சு
இங்கும் வீசியிருக்குமா? கள்ளத்தனம் ஒட்டிக்கொள்ளும் காதலின் தெரியா தீண்டுகைகள் உணர்ச்சி
கொந்தளிப்பில் மூழ்கிச் சிரித்திருக்குமா?
இந்த படத்தைக்குறித்து
தகவல் தேடினால் என்ன என்று எண்ணினேன். படத்திற்கு கீழே ஒரு வரி குறிப்பு ஒன்று. டக்கென்று
மனம் கூகிளாரை தேர்வு செய்ய…! கூகிளார் விவரங்களோடு முன் நின்றார். நான் விக்கிபீடியாவை
தெரிவு செய்துக்கொண்டேன்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில்
உள்ள பத்தான் டவுனில் புகழ்பெற்ற படிக்கிணறு, ராணி கி வாவ் எனப்படுவது. அரசர் சித்தாராஜா ஜெய்சிங்
பத்தான் அனில்பூர் பத்தான் என்று அழைக்கப்பட்டு, குஜராத்தின் தலைநகராய் விளங்கியது.
வன்ராஜா சவ்டா
என்பவர் பத்தான் நகரை அமைத்தவர். சாளுக்கிய வம்சத்தினர் [சொலாங்கி] காலத்தில் கட்டப் பட்ட அந்த படிக்கிணறு,
ராணியின் படிக்கிணறு என்று அழைக்கப் பட்டது. அது வெகு அழகிய வேலைப்பாட்டுச் செழிப்புடன் செதுக்கப் பட்ட சின்னம்.
கலையின் வடிவமைப்பாளன்
மரித்துப்போகிறான். கலைகள் ஆயிரம் வருடங்கள் கடந்து கதைப்பேசுகின்றன. செதுக்கப்பட்ட
சின்னம்…! முத்திரைக்குத்தப்பட்ட சின்னம்…! அதன் அடி நாதம் என்னவாக இருக்கும், கலையின்
அடிப்படை, அதற்கான உந்துதல், மகத்தான சக்தி….?
முன்னோக்கி சரிந்துக்கொண்டிருந்த
படிகள் ஒன்றினில் அமர்ந்துக்கொண்டேன். என் கால்கள் நிற்கும் சக்தியை இழந்து சிந்தனையின்
ஆற்றலுக்கு வலுச் சேர்த்துக்கொண்டிருந்தது. மெல்ல வீசப்பட்ட காற்று என் கேசத்தை கலைத்து,
காற்று உடல் அணுக்களின் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவி கடந்துச் சென்றது. நானோ உள்ளீடற்றவளாக
காற்றை வாங்கி வெளியேற்றிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு தலை வருடல்
உணர்வு. கன்னத்தில் மெல்ல இதழ் பதிக்கும் உணர்வு, யார்….? காற்றின் இசை புரிதலுக்கு
ஏற்ப பாதங்களின் சலங்கை ஒலி, பின் நின்று ஆட்டம் நிறுத்தும் ஆண் தீரனின் இறுக்கம்.
காதலில் இழையோடும் காமத்தின் பேச்சு….ம்ம்ம் அருகாமை எல்லை வரை ஒருவரும் இல்லை. இந்த
மனம் அதீத கற்பனைகளை கடந்துச்செல்கிறது. வரையறை அற்ற கற்பனைகள். அது உருவாக்கப்படும்
சூழலுக்கு ஏற்ப. விழிகள் மீண்டும் எழுத்துக்களோடு சரசமாட,
பொதுவாக சாளுக்கிய வம்ச மூல
கர்த்தாவான முலராஜா மகன் பீம்தேவ் நினைவாக [கி.பி. 1022 to 1063 ஆண்டில்] அவரது விதவை
ராணி உதயமதியால் [கி.பி. 1050] இது கட்டப் பட்டது.
ஓ இதை கட்டியவள்
விதவை ராணி, பெயரோ உதயமதி, எத்தனை அழகான பெயர். கணவன் எப்போது இறந்தான். இளவயதிலேயா
அல்லது முதுமையின் வெள்ளிமயிர்கள் தரித்தப் பிறகா? பெண்களுக்கு தான் ஒவ்வொரு இழப்பீடுகளுக்கும்
ஒரு பெயர். விதவை மீண்டும் சொல்லிப்பார்த்தேன். இதய இரத்த நாளங்களை அதிரச் செய்தது
அந்த ஒற்றை வார்த்தை. இளவயது விதவையாக இருந்தால் அவள் பட்ட வேதனை எத்தனையாக இருக்கும்.
இராப்பொழுது காலங்களில்
மேனியில் சதிராடும் குறுங் குறுங் உணர்வை எப்படி தகர்த்திருப்பாள். சொல்ல முடியா தகிப்பை
அணைக்கவென எரியும் நீராடுதல்கள் எத்தனையோ… யாராவது கேட்டிருப்பார்களா அவளது தனிமையயை
உள்ளத்து உணர்வுகளை.
நான் ஒரு விதவையை
சந்தித்தேன். அவள் மலைவாழ் ஜாதியினரிடையே பிறந்தவள். அவள் கணவனை விட அவள் 10 வயது மூத்தவள்.
முதல் கணவன் இறந்த பிறகு கணவனின் தம்பியையே திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவள்
அரசாங்க உத்தியோகத்தில் இருந்ததும் கொஞ்சம் நிலபுலன்கள் இருந்ததும் மறு திருமணத்தின்
தகுதிகள். விதவை திருமணத்திற்காக அரசாங்கம் கொடுத்த 10000 ரூபாய் தொகை வேறு.
இப்போது அவளுக்கு
ஐம்பது வயதிருக்கும், முகம் சுருக்கங்ளால் நிரம்பியிருந்தது. வெளுத்த தோலின் ரேகைகள்
போல….! அவன் நொடிக்கு ஒரு முறை விதவையை திருமணம் செய்துக்கொண்டேன் என்றது எனக்கு எரிச்சல்
மூட்டியது. ஓங்கி ஒரு குத்து நடு மூக்கில் நச்சென்று…!. குத்தத் தோன்றியது. அவர்களின்
பேச்சினூடே வெளிப்பட்ட உணர்வுகள் உடல் மட்டும் தவறாது இரவு புணர்ந்திருக்கும் என்பதை
வெளிப்படுத்தியது. இங்கு உணர்வுகளோடு உயிர்க்கப்படும் உறவுகளுக்கு தான் நீங்கா இடம்
என்று எண்ணிக்கொண்டேன்.
கணவனின் பேச்சு
அந்த பெண்ணை ரணப்படுத்தியது என்று உணர்ந்துக்கொண்டேன் அவள் முகச்சுழிப்பால். அவன் குத்துக்கல்லாக
உயிருடன் தான் இருக்கிறான், அடுத்த ஒப்பந்ததின் படி அவன் இறக்க வேண்டும் அவள் விதவையாக.
என்ன புரிதலோ இந்த மக்களுக்கு வெற்று காகிதத்திற்கு இருக்கும் மதிப்பு சக பெண் இனத்திற்கு
தர மறுத்து.
உதயமதியும் வேதனையில்
மூழ்கி இருப்பாள். தனக்கு கொடுக்கப்பட்ட ஆண் இல்லாமல், இளவயது நாயகியாக இருந்திருந்தால்
தன் உடலும் சேர்ந்து கதறியிருக்கும் அவன் தீண்டலின் தகிப்பை சுகிக்கவென…! முதியளானால்
நேசிப்பின் துயர் தகிக்கவே செய்யும்.
ச்சீ என்ன இந்த
புத்திக்கு வந்த கேடு. வேற்று பெண்ணின் அந்தரங்கத்தில் நுழைந்து அலசி ஆராய்ந்துக்கொண்டு,
தலையிலடித்தபடி படியினின்று எழுந்தேன்.
மீண்டும் அந்த
கிணற்றிற்குள் எட்டிப் பார்க்க தோன்றியது. உடனூடாகவே கிணற்றிற்குளிருந்து ஒரு கை நீண்டு
உள்பக்கமாக இழுப்பதாக நினைவெழும்பி அதிரச்செய்தது.
ஒருவேளை உதயமதி, கரந்தேவ்-1
ஆகியோரால் ஆரம்பிக்கப் பட்டு கணவர் இறந்த பின் முடிக்கப் பட்டிருக்கலாம். கி.பி 1304 இல் மெருங்க சூரி
எழுதிய “பிரபானந்த சிந்தாமணியில்” ராணி உதயமதி கட்டியதாக ஒரு குறிப்பு உள்ளது. கிழக்குப்
பார்த்த மகத்தான அந்த படிக்கிணறின் அளவு: நீளம் 210 அடி, அகலம் 7 அடி, ஆழம் 9 அடி
[64 மீ X 20 மீ X 24 மீ]. ஒரு படி நடைக்கூடம் ஓர் அளவீட்டு இடைப்பகுதியில் தூண்கள்
தாங்கும் அலங்கார மாளிகையோடு இருப்பது அதற்குரிய ஓர் தனித்துவ சிறப்பு. அம்முறையில் கட்டிய மாளிகைக்குள்
அதுவே மகத்தானதோர் அமைப்பாகக் கருதப்படுகிறது. கிணற்றின் வட்டப் பகுதியில் உள்ள சில சிற்பத் தட்டுகளைத் தவிர பெரும்பான்மையான
சிற்பங்கள் சிதைவால் காணப்படாதுள்ளன, இப்போது. அந்த அழிவுக்கிடையே ஒரு தூண் மட்டும் அந்தக் காலத்து அருஞ்சின்னமாக,
எழில் வேலைப்படுகளோடு இன்னும் நிற்கிறது.
சூரி எழுதிய “பிரபானந்த சிந்தாமணியில்” ராணி உதயமதி கட்டியதாக ஒரு குறிப்பு
உள்ளது. ஓ, பெண்களின் சரித்திரங்கள் வரலாற்று குறிப்புகளாக்கப் படுகிறது ஆனால் இப்பொழுது…?
பொம்பளைக்கு என்ன விடியற வரைக்கும் தூக்கம் வேண்டிக்கிடக்கு..? பொட்டச்சிங்க சொத்தை
ஆம்பளைபிள்ளைக்கிட்ட விட்டுட்டு போக வேண்டியது தானே…? இன்னும் நினைவு இடுக்குகளில் உலா வரா ஏச்சுக்களும்,
பேச்சுக்களும்.
அலங்கார மாளிகை தம்பதியரின் தனிமைக்காகவென கட்டப்பட்டிருக்குமோ, சில
ஆசைகள் நிறைவேறுவதற்கு முன்பாக கரந்தேவ் இறந்திருப்பாரோ…? கேள்வி குடைந்து மனதை ரணமாக்கியது.
ஒரு வேளை போர்தந்திரங்களும் இங்கு அரங்கேறியிருக்கலாம். இலலாமலும் இருக்கலாம்
தோள்களை ஒரு முறை குலுக்கி என்னை சமநிலைப்படுத்திக்கொண்டேன்.
No comments:
Post a Comment